Search This Blog

Jan 28, 2012

தேவார திருவாசகங்கள் (பகுதி-3): பன்னிரு திருமுறைகள்.



தேவார திருவாசகங்கள் (பகுதி-3): பன்னிரு திருமுறைகள்.
3.4 சுந்தரமூர்த்தி சுவாமிகள்:
திருமுறை ஆசிரியர்களுள் மூன்றாமவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இவர் அருளிய பனுவல்கள் ஏழாம் திருமுறையாகத் தொகுக்கப் பட்டுள்ளன. இவர் திருமுனைப் பாடி நாட்டில், ஆதி சைவர் குலத்தில் சடையனார் - இசை ஞானியார் அருமகவாக அவதரித்தார். இவர் பிள்ளைத் திருநாமம் ஆரூரர் என்பது. திருமண நாளில் சிவபெருமான் புத்தூரில் தடுத்து ஆட்கொண்டான். இறைவன் விரும்பியவாறு திருவெண்ணெய் நல்லூரில் ‘பித்தா பிறை சூடி’என்று சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்க, இவர் பதிகப்பாமாலைகள் பாடத் தொடங்கினார்.
திருவதிகையில் திருவடி தீட்சை பெற்றார். திருவாரூரில் இறைவன் தம்மை இவருக்குத் தோழனாகத் தந்தான். திருவாரூரில் பரவையாரையும் திருவொற்றியூரில் சங்கிலியாரையும் மணந்தார். சிவபெருமான் இவருக்காக வீடுகள் தோறும் சென்று பிச்சை ஏற்று உணவு படைத்தார். பரவையின் ஊடல் தீர்க்கத் தூது சென்றார். சேரமான் பெருமாள் நாயனாரும், கோட்புலியாரும் இவர் காலத்தவர். 


முதலை வாய்ப் பாலனை இவர் பதிகம் பாடி மீட்டார். வன்தொண்டன் என்பதும் இவர் பெயர்களுள் ஒன்று. திருத்தொண்டத் தொகை இவரால் அருளப்பட்டது. ஆடிச் சுவாதி நாளில் இவர் வெள்ளானை மீது ஏறிக் கயிலை சேர்ந்தார். சகமார்க்கம் என்றும் யோகநெறி என்றும் கூறப்படும் தோழமை நெறியில் வாழ்ந்தவர் இவர். இவர் உலகில் வாழ்ந்திருந்த காலம் 18 ஆண்டுகள் என்பர். இவர் காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டின் தொடக்கம் என்று கூறப்படுகிறது.
3.4.1 திருத்தொண்டத் தொகை: 

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறையுள் 100 பதிகங்களும் 1026 அருட்பாடல்களும் இடம் பெற்றுள்ளன. 96 திருத்தலங்கள் இவர் பாடல் பெற்றுச் சிறந்துள்ளன. இவர் 17 பண்களில் பாடியுள்ளார். இவர் அவதரித்த நோக்கமே திருத்தொண்டத்தொகை என்ற அடியார் வரலாறு கூறும் பதிகம் பாடுவதற்கென்று சேக்கிழார் குறிக்கிறார்.
மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத்

தீதிலாத் திருத்தொண்டத் தொகை தரப்போதுவான்..(பெரியபுராணம்-35)

சுந்தரர் வருகை அமைந்தது என்பது சேக்கிழார் எண்ணம் திருத்தொண்டத் தொகையின் சிறப்பினைப் பெரிய புராணம் பலவாறு விரித்துரைக்கிறது. சான்றாக

ஈசன் அடியார் பெருமையினை

எல்லா உயிரும் தொழ எடுத்துத்
தேசம் உய்யத் திருத்தொண்டத் தொகை.....(பெரியபுராணம்-1270)

இதில் 60 தனியடியார்களும் 9 தொகையடியார்களும் குறிக்கப்பட்டுள்ளனர். பெரிய புராணத் தோற்றத்திற்கு இதுவே முதல் நூலாக அமைந்தது. இதில் ‘தில்லை வாழ் அந்தணர்’ என்று தொடங்கி 11 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

3.4.2 பக்திக் கனிவு:
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் ஏழாம் திருமுறைப் பாடல்கள் இலக்கிய எழிலும், கற்பனை வளமும், பக்திக் கனிவும் மிக்கன. இறைவன் ஒருவனே போற்றிப் புகழத் தக்கவன் என்பதனை,  

தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்மை யாளரைப் பாடாதே எந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்…(7564) .. (இச்சை = விருப்ப மொழிகள்)


குற்றம் செய்யினும் மன்னித்துச் சிவ பெருமான் அருள்செய்வான் எனத் தாம் கொண்ட நம்பிக்கையை,
குற்றஞ் செய்யினும் குணம் எனக் கருதும்

கொள்கை கண்டு நின் குரைகழல்அடைந்தேன்
பொற்றிரள் மணிக் கமலங்கள் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே ….(7786) ....என்ற அடிகளில் சுந்தரர் பதிவு செய்கிறார்.


3.4.3 அரிய தொடர்கள் சைவப் பெருமக்கள் போற்றித் துதிக்கும் பல அரிய பாடல்களும், தொடர்களும் ஏழாந்திருமுறையுள் இடம் பெற்றுள்ளன. ஒன்றிரண்டு கீழே தரப்பட்டுள்ளன.

நற்றவா உனை நான்மறக்கினும்

சொல்லும் நா நமச்சி வாயவே…(7712)

வழுக்கி வீழினும் திருப்பெயர் அல்லால்

மற்று நான் அறியேன் மறு மாற்றம்…(7774)

அன்னம் வைகும் வயற் பழனத்து அணி

ஆரூ ரானை மறக்கலும் ஆமே…..(7827)

விற்றுக் கொள்வீர் ஒற்றி அல்லேன்

விரும்பி ஆட்பட்டேன்….(8189)

மண்ணுலகில் பிறந்து உம்மை

வாழ்த்தும் வழியடியார்…(8245)

 
=================================================

3.5 மாணிக்கவாசகர்: 
பன்னிரு திருமுறைகளுள் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது மாணிக்கவாசகரின் திருவாசகம். இவரே இயற்றியதாகக் கருதப்படும் திருச்சிற்றம்பலக் கோவையாரும் எட்டாம் திருமுறையாகக் கொள்ளப்பட்டு வருகிறது. மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில் திருவாதவூரில் ஆமாத்திய பிராமண குலத்தில் சம்புபாதாசிரியர் - சிவஞானவதி என்னும் பெற்றோர்களுக்கு அருமகவாக அவதரித்தார். 

இயற்பெயர் திருவாதவூரர். பாண்டியன் அவையில் ‘தென்னவன் பிரமராயன்’ என்ற பட்டம் வழங்கப் பெற்று முதல் அமைச்சராக விளங்கினார். மன்னன் அளித்த பொருளை இவர் குதிரை வாங்கப் பயன்கொள்ளாது திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்) திருக்கோயில் திருப்பணிக்குச் செலவிட்டார். சிவபெருமான் குருவடிவம் காட்டி இவரைக் குருந்த மர நிழலில் ஆட்கொண்டான்.

அக்காலை இவர் பாடிய பனுவல்களே திருவாசகம். இறைவன் இவருக்கு மாணிக்கவாசகர் என்னும் திருநாமம் சூட்டினார். நரி பரியானது, வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்தது, இறைவன் பிரம்படிபட்டது, பௌத்தர்களோடு வாதிட்டது, தில்லைப் பொன்னம் பலத்தில் இறைவன் தாள் மலர்களில் கலந்தது என்பன இவரது வாழ்வியல் அற்புதங்களாகும். ஆனி மக நாளில் இவர் இறையடிகளில் கலந்தார். இவ்வுலகில் இவர் வாழ்ந்த காலம் 32 ஆண்டுகள். இவர் காலம் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்குப் பிற்பட்டது என்பதே ஆய்வாளர் முடிவு. இவர் தேவார மூவருக்கு முற்பட்டவர் என்றும் சிலர் கூறியுள்ளனர்.

3.5.1 திருவாசகம்:
திருவாசகம் 51 பகுதிகளையும் 649 பாடல்களையும் கொண்டுள்ளது. திருவாசகத்தில் 38 சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன. முதற்கண் சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் என்னும் நான்கு பெரும் பகுதிகள் அமைந்துள்ளன. அடுத்து வரும் திருச்சதகம் 100 பாடல்களைக் கொண்டது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.


திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன. ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது இதன் சிறப்பை உரைக்கும் பழமொழி.
மேலை நாட்டுக் கிறித்துவர்களும் இதன் சிறப்பில் நெஞ்சைப் பறி கொடுத்துள்ளனர். இதனை ஒரு அனுபவ நூல் என்பர். திருவாசகச் சிறப்பினைப் பின்வந்த சிவப்பிரகாச சுவாமிகள், வடலூர் இராமலிங்க வள்ளலார் முதலியோர் பெரிதும் போற்றிச் சிறப்பித்துள்ளனர். திருவாசகம் ஒரு சிறந்த பாராயண நூலாகத் திகழ்ந்து வருகிறது.

3.5.2 அனுபவ வெளிப்பாடுகள்:

திருவாசகத்தில் பக்தி அனுபவ வெளிப்பாட்டில் வந்த பல அரிய தொடர்கள் இடம் பெற்றுள்ளன.

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க(சிவ புராணம்-1)
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி….(சிவ புராணம்- 18)
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்.(சிவ புராணம்- 26-31)
(விருகம் = மிருகம் என்பது விருகம் என மருவிற்று, பல்விருகம் = பல மிருகம், தாவரம் = நிலைப்படு பொருள், சங்கமம் = இயங்கும் பொருள்) இவையும், இவை போல்வனவுமாகிய அரிய தொடர்கள் பலவற்றைத் திருவாசகத்தில் காணலாம். திருவாசகத்தில் ஞான அனுபவ வெளிப் பாடாக அமைந்த உள்ளுருக்கும் அருட்பாடல்கள் பல உள்ளன. ஒன்றிரண்டைக் காணலாம்.

யானே பொய் என் நெஞ்சும் பொய்
என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால்
உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின்
தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன்
உனைவந்து உறுமாறே... (திருச்சதகம் - 90) 

(உறுமாறே = பெறும் வழி) என்ற பாடலில் தன்னிலை இரக்கம் நிறைந்துள்ளது. ‘போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்’ என்ற பாடலில் படைத்தல் முதலிய இறைவனின் ஐந்தொழில்களும் ஒரு சேரப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மா£ணிக்கவாசகரின் பக்தி வைராக்கியத்தை
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே

அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச்சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே .. (பிடித்த பத்து:538) .....என்ற அரிய பாடல் அளவிட்டுக் காட்டுகிறது.

3.6. திருச்சிற்றம்பலக் கோவையார்: 


எட்டாந் திருமுறையுள் இடம் பெற்றுள்ள திருச்சிற்றம்பலக் கோவையார் 400 கட்டளைக்கலித்துறைப் பாக்களால் நடையிடுகிறது. அகப்பொருள் துறைகள் பலவற்றையும் அவை நிகழும் முறையில் நிரல்படக் கோத்துச் செய்யப்படும் அகப் பொருள் நூல் வகையைச் சார்ந்தது கோவை என்பது. திருச்சிற்றம்பலக் கோவையாரே இவ்வகையில் முதல் நூல் என்பர். 

தில்லைக் கூத்தப் பெருமானைப் பாடல் தோறும் இணைத்துப் பாடும் வகையில் புகழ்ந்துரைக்கும் போக்கில் இந்நூல் நடையிடுகிறது. தில்லைச் சிற்றம்பல வனின் அருளிப்பாடுகள் பலவும் மிக்க நயத்துடன் இந்நூலுள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. சான்றாக.:
தென்னா டுடைய சிவனே போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி
(போற்றித் திருவகவல்  164-65)


உணர்ந்தார்க்கு உணர்வரியோன் தில்லைச்
சிற்றம்பலத்து ஒருத்தன்….(திருக்.9)


பொருளாய் எனைப் புகுந்து ஆண்டு 
புரந்தரன் மால் அயன் பால்
இருளாய் இருக்கும் ஒளி(திருக்-73 )..  
புரந்தரன் = இந்திரன்)

3.7 தொகுப்புரை:

தேவாரத் திருவாசகங்கள் என்ற இப்பதிவில் தேவாரம் மற்றும் திருவாசகங்களின் தொகுப்பு முறை, பதிக எண்ணிக்கை, பாடல் தொகை, பாடப் பெற்ற தலங்கள், அமைந்துள்ள பண் அடைவுகள், தேவாரம் பாடிய மூவரின் வரலாற்றுச் சுருக்கம், அவர் தம் பெருமைகள், பாடல் சிறப்பு, வாழ்ந்த காலம் முதலியன முறையாக விளக்கம் செய்யப் பெற்றுள்ளன. அரிய தேவாரத் திருவாசகத் தொடர்களும், பெரிதும் போற்றப்படும் அருள் பாடல்களில் சிலவும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. 



இப்பதிவில் அறிந்து கொள்ளத்தக்கவை:
சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு வழங்கப்பெற்ற பெயர்களில் இரண்டினைக்குறிப்பிடுக...1. வன் தொண்டர் 2. நம்பியாரூரர்
திருத்தொண்டத் தொகையுள் இடம் பெற்றுள்ள தனியடியார், தொகையடியார் எத்தனை பேர்?.. 1. தனியடியார் - 60  2. தொகையடியார் - 9
சுந்தரர் தேவாரத்தில் நாம் காணும் அரிய சொல்லாட்சிகளில் இரண்டினைக் குறிப்பிடுக...
  1. ‘நற்றவா உனை நான்மறக்கினும் சொல்லும் நா நமச்சி வாயவே’
  2. ‘வழுக்கி வீழினும் திருப்பெயர் அல்லால் மற்று நான் அறியேன் மறு மாற்றம்’
எட்டாம் திருமுறையுள் இடம் பெற்றுள்ள இரண்டு நூல்களின் பெயர்களை எடுத்து எழுதுக....1. திருவாசகம்: 2. திருச்சிற்றம்பலக் கோவையார்
திருச்சிற்றம்பலக் கோவையார் நூலின் யாப்பு, பாடல் தொகைகளைக் குறிப்பிடுக...யாப்பு - கட்டளைக் கலித்துறை பாடல் தொகை : 400
இம்மையே உன்னைச்சிக்கெனப் பிடித்தேன். எங்கு எழுந்தருளுவது இனியே - என்று பாடியது யார்?..இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே - இதைப் பாடியது மாணிக்கவாசகர்.
=================================================================
முனைவர். இரா. செல்வக் கணபதி அவர்களின் விளக்க உரையுடன் மேலும் பயணிப்போம் பன்னிரு திருமுறைகளின் ஊடாக !!! அன்புடன் கே எம் தர்மா...

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!